அக்கா என்னும் திருமந்திரம்

பேரன்புடன் உச்சரிக்கப்படும் சொல் எதுவும் ஊழ்க நுண்சொல் ஆகிவிடும் போலும்.  இறையுடன் நம்மை இணைக்கும் ஊழ்க நுண்சொல்.  சுவாமி வினய சைதன்யாவினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அக்கமகாதேவியின் கன்னட வசன கவிதைகளின் Songs For Siva வாசிப்பின் பின் அப்படி ஒரு பேரன்பை அக்கா என்னும் சொல்லிலிருந்து எழச் செய்கிறது

12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்த வீரசைவ மரபின் மாபெரும் பக்தரும் மெய்ஞானியும் கன்னட வசன இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆன பேரன்பின் அக்கமகாதேவியை அவரது ஈடு இணையற்ற இறைவன் சென்னமல்லிகார்ஜூனனென்னும் சிவபெருமானை சுவாமி வினய சைதன்யாவின் வழிசென்று உணர்வது எவ்வளவு பொருத்தமானது என்பதை H.S. சிவபிரகாஷ் அவர்களின் முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.  முன்னதாக A.K. ராமானுஜன் அவர்களால் அக்கமாகாதேவியின் வசனங்கள் Speaking of Siva மூலமாக ஆங்கில வாசகர் உலகிற்கு வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டு அதற்கும் முந்தைய மொழிபெயர்ப்புகளைப் போலல்லாமல் அது வெற்றிகரமான ஒன்றாக இருந்ததை அவர் குறிப்பிடுகிறார்.  ராமானுஜனால் மூல நூல்களின் அம்சங்களை வெற்றிகரமாக கைப்பற்ற முடிந்ததுடன் அதை அக்காலத்திய ஆங்கில-அமெரிக்க கவிதை மொழியில் வழங்கமுடிந்தது.  மொழிபெயர்ப்பின் போதாமைகளைக் கடந்தும் மூலநூலின் ஆற்றலால் அதனால் ஆங்கில வாசகர்களின் இதயத்தில் தன் இசையை ஒலிக்க முடிந்தது.  பதிற்றாண்டுகள் பின்னர் நிகழ்த்தப்பெற்ற சுவாமி வினய சைதன்யா அவர்களின் புதிய மொழிபெயர்ப்பு AK ராமானுஜனிலிருந்து எவ்வாறு சிறந்தெழுகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.  ராமானுஜனின் நாயகன் சாதனை புரிந்த விளையாட்டு வீரனைப் போன்றவன் கட்டுடல் கொண்டவன் ஆனால் ஆன்மா அற்றவன் அவன் அக்கமகாதேவியின் நாயகன் அல்ல என்கிறார்.

ஸ்ரீ நாராணகுருவின் மரபைச் சார்ந்தவரும் தன்னளவில் ஆத்மசாதகருமான சுவாமி வினய சைதன்யா அக்கமகாதேவியின் வசனங்களை மொழிபெயர்க்க எவ்வாறு தகுந்தவர் என்பதை விளக்குகிறார்.  குறிப்பாக அக்கமகாதேவியை ஆழமாக புரிந்துகொண்டவிதத்தில்.  அக்கமகாதேவியின் வசனங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை.  கவிதையற்ற கவிதையும், மதமும் கட்டளை நூல்களும் அற்ற ஆன்மிகமும் அக்கமகாதேவியின் வசன இலக்கியத்தின் இயல்புகள்.  அவரது நாயகனோ மலரினும் மெல்லியனாகவும் பெரும் வலிமை கொண்ட காடனாகவும் இருப்பவன் (தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் என்ற திருமந்திரம் நினைவுக்கு வருகிறது).  மேலும் தான் பெயரளவில் மட்டுமே பெண் என்று அக்கா கூறுகிறார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

சுவாமி வினய சைதன்யாவின் முன்னுரை விரிவானதும் தன்னளவிலேயே முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் கொண்ட ஒன்று ஆகும். சிவ-சக்தியை வணங்கும் காளிதாசரின் ரகுவம்சத்தின் வரிகளைக் குறிப்பட்டு அவர் தொடங்குகிறார் (கூளிப்போர் செய்யும் இறைவனையும் ரசிக்கும் அன்னையையும் கூறும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்து நினைவுக்கு வருகிறது)  விரிவாக இந்திய மற்றும் உலக மெய்யியல் மரபுகளில் இதேபோன்று அமைந்த இறையுடனான பேரன்பு கொண்ட மெய்படிவர்களை பெரும் பக்தர்களைக் குறிப்பிட்டு அவ்வெளியில் ஒளிமிக்க அக்கமகாதேவியை சுட்டுகிறார்.

சுவாமி வினய சைதன்யா

திருவள்ளுவர், காளிதாசர், சங்கரர், கபீர், துக்காராம், ஞானேஷ்வர், அல்லம்ம பிரபு, அக்கமகாதேவி முதல் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், தாகூர், ஸ்ரீநாராயணகுரு வரை நீளும் ஒரு பொன்சரடு.  மெய்யியல் இலக்கிய அடிப்படையில் அக்கமகாதேவிக்கு இணையான St. John of Cross-ன் கவிதைகள், ரூமி மற்றும் அத்தாரின், Songs of Song, சங்கரரின் சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, ஜெயதேவரின் கீதகோவிந்தம், ஸ்ரீநாராயணகுருவின் காளிநாடகம் மற்றும் பிற செய்யுள்கள் காளிதாசரின் சியாமளா தண்டகம், குமாரசம்பவம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

அக்கமகாதேவியின் வரலாற்றைச் சொல்லும் அவர் அவரை அன்னையின் அவதாரம் என நம்புபவர்களுக்கு வரலாறு பொருட்டல்ல என்பதையும் கூறுகிறார்.

சாதி இன மத மொழி ஆசாரவாத அடிப்படையில் எழுப்பப்பட்ட எல்லா மனிதச் சிறுமைகளையும் தகர்த்து எழுந்தது வீரசைவம், இன்று அதுவே அச்சிறுமைகளால் கைப்பற்றபட்டு விட்டதையும் குறிப்பிடுகிறார்.

நீங்கள் சிவபக்தர் என்றால் உள்ளத்தின் உருக்கம் அன்பின் கண்ணீர் இதன் வாசிப்பில் தவிர்க்க முடியாதது. ”சென்ன” என்றால் அழகு.  இறைவனுடன் போர் புரியும் அர்ஜுனன் அவர்மீது எய்யும் அம்புகள் அனைத்தையும் மல்லிகைகளாக மாற்றி அவர் மீதுபொழியச் செய்கிறாள் அத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னை சக்தி.

அக்காவின் வசனங்கள் பல அவர் மற்றவர்களுக்கு கூறிய பதில்கள் எனவும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் எதிர்வினைகளாகவும் (Responses) எழுந்தவை.

அக்காவின் அருளில் திளைக்கச் செய்த சுவாமி வினய சைதன்யாவிற்கு நன்றி கூறுகிறேன்.

When I did not know myself

Where were you, tell me?

Like the colour in gold,

You were in me.

Though you were in me,

I saw you as different,

O Channamallikarjuna, Jasmine tender!

என்னை நான் அறிந்திராதபோது

எங்கிருந்தாய் நீ, சொல்?

பொன்னில் அதன் நிறம் போல

என்னில் இருந்தாய் நீ.

என்னில் நீ இருந்தபோதும்,

நான் உன்னை வேறெனக் கண்டிருந்தேன்,

ஓ சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்!

The coward has no happiness,

Whatever he does.

The brave has no fear, wherever he goes.

The calm has no evil to lower him.

The kind will not be cursed.

One reaching you,

Rid of desire for women and wealth of others,

Has nothing more to fear,

O Channamallikarjuna, Jasmine tender!

கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்

வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்

அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை

அன்புகொண்டோர் சபிக்கப்படுவதில்லை

நின்னை அடையும்,

பெண்ணிற் பிறர்பொருளில் விழைவற்ற ஒருவன்

அஞ்சுதற்கு ஏதுமில்லை

ஓ சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்!

Seeing bare round breasts

And the beauty of full youth

You came, O brother.

Brother, I am no female,

I am not a prostitute;

Then seeing me again and again,

Who did you think I was?

Men other than Channmallikarjuna, jasmine-tender,

Will not suit us, O brother.

துகிலற்ற வட்டமுலைகளும் இளமையின் முழு அழகும் கண்டு நீ வந்தாய், சகோதரா.

சகோதரா, நான் பெண்ணல்ல,

நான் விலைமகளல்ல;

பிறகு என்னை மீண்டும் மீண்டும் பார்க்கிறாய்,

என்னை யாரென்று நினைக்கிறாய்?

ஆடவரில் சென்னமல்லிகார்ஜுனன், மல்லிகையின் மெல்லியோன் அன்றி வேறவரும் எங்களுக்கு பொருத்தமானவரல்ல சகோதரா.

When I say I have seen,

Seeing becomes a veil,

If I say I am united,

The mood becomes veil,

What shall I say and how?

If I say I know

Forgetfulness becomes a veil.

How can I overcome your maya?

Save me!

Channamallikarjuna, Jasmine tender!

நான் கண்டேன் என்று சொல்லும்போது

காணுதல் திரையென்றாகிறது

இணைந்தேன் என்பேனாகில்

மனநிலை திரையென்றாகிறது

நான் என்ன சொல்லவேண்டும், எவ்வாறு சொல்லவேண்டும்?

நான் அறிவேன் என்று சொல்வேனாகில்

மறதி திரையென்றாகிறது.

நின் மாயையை எவ்வாறு கடப்பேன்?

காத்தருள்க!

சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்.

I went to the forest

Because of the agitation of my body.

I begged of every plant to sustain the body;

They gave me from the bounty of their being.

Begging, I was caught in becoming;

Giving, they become devotees.

I will not beg ever again,

Channamallikarjuna, Jasmine tender; I swear.

நான் காட்டிற்கு சென்றேன்

என் உடலின் தவிப்பினால்.

ஒவ்வொரு தாவரத்திடமும் இரந்தேன் உடலைத் தரித்திருக்க வேண்டி;

அவை வள்ளன்மையுடன் அளித்தன தம் இருத்தலில் இருந்து.

இரந்ததால், ஆதலில் சிக்கினேன்.

வழங்கியமையால் அவை அன்பர்களாயின.

நான் இனி ஒருபோதும் இரக்க மாட்டேன்

சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய், சத்தியம் செய்கிறேன்.

Wait, wait, O hunger,

Wait, wait, O thrist,

Wait. wait, O sleep,

Wait, wait, O desire,

Wait, wait, O anger,

Wait, wait, O delusion,

Wait, wait, O greed,

Wait, wait, O pride,

Wait, wait O strife,

All of you, moving and unmoving,

Wait, wait: I am awaiting an urgent summons

From Channamallikarjuna, Jasmine-tender.

காத்திரு, காத்திரு பசியே

காத்திரு, காத்திரு தாகமே

காத்திரு, காத்திரு உறக்கமே

காத்திரு, காத்திரு விருப்பமே

காத்திரு, காத்திரு ஆத்திரமே

காத்திரு, காத்திரு உளமயக்கே

காத்திரு, காத்திரு பேராசையே

காத்திரு, காத்திரு பெருமிதமே

காத்திரு, காத்திரு சச்சரவே

நீங்கள் எல்லோரும், நகர்வன நகராதன யாவரும்,

காத்திருங்கள், காத்திருங்கள்: நான் ஒரு அவசர அழைப்பிற்கென காத்திருக்கிறேன்

சென்னமல்லிகார்ஜுனன், மல்லிகையின் மெல்லியோனிடமிருந்து

What is to come tomorrow,

Let it come to me today.

What is to come today,

Let it come right now.

Do not say then and now,

O Channamallikarjuna, Jasmine-tender.

நாளை எது வரவேண்டுமோ

அது இன்றே என்னிடம் வரட்டும்

இன்று எது வரவேண்டுமோ

அது இக்கணமே வரட்டும்

அப்போது இப்போதென்று சொல்லவேண்டாம்

சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்

I saw the whole, I saw the atom,

I saw the joys of chance,

Of effort and of perception;

Knew knowledge

And forgot forgetfulness.

Wiping out the memory of desire

And knowing you, I became boundless,

O Channamallikarjuna, Jasmine-tender.

முழுமை கண்டேன், அணுவினைக் கண்டேன்

வாய்ப்பின், முயற்சியின், புரிதலின் உவகைகள் கண்டேன்

அறிவை அறிந்தேன்

மறதியை மறந்தேன்.

ஆசையின் நினைவைத் துடைத்தெறிந்ததாலும் நின்னை அறிந்ததாலும், எல்லையற்றவளானேன்,

சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய்

After the body takes your form,

Whom shall I serve?

After the mind takes your form,

Whom shall I remember?

After the breath takes your form,

Whom shall I worship?

After knowledge has merged in you,

Whom shall I know,

I know you, O Channamallikarjuna, Jasmine-tender,

Becoming you in your self.

உடல் நின் வடிவுகொண்டபின்

யாருக்கு தொண்டுபுரிவேன்?

மனம் நின் வடிவுகொண்டபின்

யாரை நினைவு கொள்வேன்?

சுவாசம் நின் வடிவுகொண்டபின்

யாரை நான் தொழுவேன்?

அறிவு நின்னுள் கலந்தபின்

யாரை நான் அறிவேன்?

நின்னை நான் அறிவேன், சென்னமல்லிகார்ஜுனா, மல்லிகையின் மெல்லியோய், நின்னில் நீயென்றானதினால்.

சுவாமி வினய சைதன்யா ஆங்கில மொழிபெயர்ப்பை மிகுந்த கவனத்துடனும் நுணுக்கத்துடனும் செய்ததுடன் தேவையான இடங்களிலெல்லாம் குறிப்புகளும் விளக்கங்களும் தந்துள்ளார்.  மொத்தம் 203 வசனங்கள் நூலில் உள்ளன. இங்கு தமிழ்ப்படுத்திய ஒருசில வசனங்களின் நிறைகுறைகள் என்னைச் சார்ந்தவை.

1 பின்னூட்டம்

  1. அண்ணா
    வணக்கம்
    இது போன்ற விடயங்கள் உங்கள் பதிவு வாயிலாகவே அறிந்து கொண்டேன் .புதிய அறிமுகத்திற்கு நன்றிகள் அண்ணா …

    Like

பின்னூட்டமொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s